செவ்வாய், 22 ஜனவரி, 2019

கைவல்லன், வாய்வல்லன் கதை.


       
   முன் ஒரு காலத்தில் வனங்காட்டின் ஒரு மூலையில், அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி என மூவர் ஒரு குடிசைவீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
அண்ணன் பெய‌ர்  வாய்வல்லன். ஒரு சொம்பு தண்ணீரை தூக்கச்சொன்னால் கூட கிழே போட்டு விடுவான். அவ்வளவு பலசாலி..!!. ஆனால் வாய்ச்சொல்லில் படுகெட்டிக்காரன், ஒரு படையே வந்தாலும் வாயால் மிரட்டியே பயந்து ஓடச்செய்துவிடுவான். அப்பேர்பட்ட வாய்சொல்வீரன்.
அவன் மனைவியும் அவனுக்கு சற்றும் குறைந்தவள் அல்ல அவள்பெயர் வாய்வல்லி. தம்பியோ இவர்களுக்கு நேர்மாறாக‌ மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன், ஆனால் ஒருமலையையே தூக்கச் சொன்னால் கூட!! அசைத்துப்பார்க்கும் பலசாலி!! அவன்பெயர் கைவல்லன்.
    அண்ணன், தம்பி இரண்டு பேரும் காட்டில் விறகுவெட்டி பக்கத்து ஊர்சந்தையில் விற்றுப் பிழைத்து வந்தார்கள்.வாய்வல்லிக்கு வீட்டில் சமைப்பதுதான் வேலை.
   தம்பி கைவல்லனுக்கு ஒருநாள் ஆட்டுக்கறி சாப்பிடவேண்டு

மெனஆசைவந்தது, [வாய்வல்லன், வாய்வல்லீ  இருவருக்கும்கூட ஆட்டுக்கறி சாப்பிட ஆசைதான்] "அண்ணா! ஆட்டுக்கறி சாப்பிட ஆசையாக உள்ளது" என்றான். கையிலோ கறிவாங்கும் அளவு பணம் இல்லை." சரிதம்பி இன்று சாய்ங்காலம் பக்கத்து காட்டில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுபிடிப்போம் சரியா?”என்றான். தம்பி கைவல்லனுக்கு ஆடு திருட பயமாக இருந்தாலும் அண்ணன் கூட‌ இருக்கும் தைரியத்தில் சரி என்றான். அந்திசாயும் வேலையில் பக்கத்துகாட்டு, ஆட்டுப்பட்டிக்கு, ஆடுதிருட!! அண்ணன், தம்பி இருவரும்சென்றனர்!.
     ஆட்டுப்பட்டியை இருவரும் வந்து சேர்ந்தபோது, ஒருவர்முகத்தை ஒருவருக்கு அடையாளம் தெரியாத அளவு நன்றாக இருட்டிவிட்டது. ஆனால் ஆடுகள் இன்னும் பட்டி வந்து சேரவில்லை .அண்ணன் சொன்னான், "தம்பி ஆட்டு மந்தை இன்னும் பட்டி திரும்பவில்லை அதுவரை இங்கே மறைந்திருப்போம்" என்று சொல்லி, ஆட்டுப்பட்டியின் ஒருமூலையில் ஒளிந்து கொண்டார்கள். 
   இவர்கள் கெட்டநேரமோ! இல்லை குட்டிபூதத்தின் கெட்டநேரமோ!! என்னவோ இவர்களுக்கு முன்பாகவே ஆடுதிருட ஒரு குட்டிபூதமும் வந்து ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருந்தது. இருட்டில் ஒருவருக்கும் ஒன்றும் அடையாளம் தெரியவில்லை. சிறிதுநேரத்தில் ஆடுமேய்க்கும் தாத்தா ஆட்டுமந்தையை ஓட்டிவந்து பட்டியில் அடைத்தார். அவருக்கு வாய்வல்லனோ, கைவல்லனோ, குட்டிபூதமோ ஒளிந்து கொண்டிருப்பது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவரோ வழக்கம் போல பனைமரதில் அடித்திருந்த ஒருஆணியில் தன் வெள்ளை வேட்டியை தொங்கவிட்டார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்த
வெள்ளைவேட்டி ஒரு மனிதன் நிற்பதைபோலவே தெரிந்தது. பிறகு அந்தத் தாத்தா தன்வீட்டிற்க்குச் சாப்பிடச் சென்றார். சற்று தூரமாகச் சென்றவர் என்ன நினைத்தாரோ, பின்னால் திரும்பி அந்த வேட்டியை பார்த்து சத்தமாகச் சொன்னார் "டேய்!!பையா!நான் சாப்பாட்டிற்கு போயிட்டு வாரே அதுவரை பட்டியை பத்திரமா பாத்துக்கோ!! திருடன்‍‍_கிருடன்,பூதம்_கீதம் வந்துவிடப் போகிறது ஜாக்கிரதை!"என்று கூறிவிட்டு வீட்ற்குச் சென்றார்.
   கைவல்லனோ மிகவும் பயந்து நடுங்கிவிட்டான். "அண்ணா!  நாம்தான் திருடன், கிருடன் யார்? அவன் நம்மைவிடப் பெரியவனோ!நம்மையே பிடித்து சாப்பிட்டு விடுவானோ?" என்று நடுங்கிய படியே மெதுவாகக் கேட்டான். அதற்கு வாய்வல்லன்"அதெல்லாம் ஒன்னும் இல்லையடா தம்பி ஒரு பேச்சிற்காக‌ தாத்தா திருடன்‍‍_ கிருடன், பூதம்_ கீதம் என்று சொல்லி விட்டுச் செல்கிறார், நீ நல்லகொழுத்த ஆட்டைத் தேடிப்பிடி" என்றான்.
    ஈரக்குலை யெல்லாம் நடுங்கிப் போய்விட்டது முட்டாள் குட்டி பூதத்திற்கு! "ஐய்யய்யோ! ஐய்யய்யோ! நாம்தான் பூதம், கீதம் என்பதுயார்? நம்மையே பிடித்துதின்று விடுமோ!என்று பயந்துநடுங்கியது.போதாக்குறைக்கு 'பட்டியில் யாரோ கிசுகிசு என்று பேசுவதும் "நல்லகொழுத்த ஆட்டைதேடிப்பிடி" என்பதும் காதில் விழுகிறதே!! இன்று செத்தோம்!' என்று நினைத்தது குட்டிபூதம்.
   மூத்திரம்[Urine]வேறு முட்டிக்கொண்டு வந்தது,அப்படியே அடக்கிக் கொண்டு ஒரு மூலையில் போய் கம்னு குறுக்கி படுத்துக் கொண்டது குட்டிபூதம்.கைவல்லனோ ஒவ்வொரு ஆட்டையும் பிடித்துத் தூக்கிப் பார்த்துவிட்டு "அண்ணா எந்த‌ஆடும் கனமாகவே இல்லையே" என்றான்.
    முட்டாள் குட்டிபூததிற்கு ஒன்றுமட்டும் புரிந்துபோயிற்று  "ஆஹா இவர்களும் நம்மைப்போல் ஆடு திருடத்தான் வந்திருக்கிறார்கள், இவர்கள் கண்ணில் படாதவரை நல்லது" என்று நினைத்தது. கீதம் இரண்டும் நம்மை தேடிவரவில்லை ஆடு பிடிக்கத்தான் வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பே குட்டிபூததிற்க்கு சற்றுநிம்மதியாக இருந்தது.
   அதேநேரம் அதன் கை கால்களை இன்னும்குறுக்கி ஒருஆடு படுத்திருப்பதை போலவே படுத்துக் கொண்டு கண்களையும் இருக்கி மூடிக் கொண்டு அம்மாபூதம் சொல்லித்தந்த பூதசாமிகளை யெல்லாம் மனதுக்குள் வேண்டிக்கொண்டது "பூதசாமி கருப்பம்மா! பூதசாமி காத்தம்மா! பூதசாமி முனியப்பா! எப்பிடியாவது இந்த ஒருதடவை என்னை இந்த கீதத்துகிட்டே இருந்து காப்பாற்றி விடுங்கள், அப்பாவிடம் சொல்லி, பத்து மனிதர்களையாவது பலிதாரேன். இனிமேல் இந்த காட்டுப்பக்கமே எட்டிப்பார்க்கவே மாட்டேன் "என்று மனதுக் குள்ளாகவே வேண்டிக்கொண்டது குட்டிபூதம்.' பயந்தவனுக்கு பார்த்ததெல்லாம் பேய்' என்பதுபோல குட்டிபூததிற்கு மெதுவாக கண்ணைத்திறந்தாலே, ஆடுகள் எல்லாம் கீதமாகவே தெரிந்தது. "ஐய்யய்யோ!! ஐய்யய்யோ!!"என்று மேலும் பயந்து,கண்களையும் இருக்கி மூடிக்கொண்டு பூதசாமிகளை மேலும் மனதுக்குள் வேண்டிக்கொண்டது. அதேநேரம் கைவல்லனோ குட்டிபூதத்தின் பிடரிமுடியைப் பிடித்து தூக்கிப் பார்த்து விட்டு "அண்ணா இந்த‌ஆடு கனமாகவே இருக்கிறது நானே தூக்க முடியவில்லை!"என்றான். குட்டிபூதத்திற்க்கு மூனுவிநாடி மூச்சே நின்று போனது. என்னஆனாலும் கண்களை மட்டும் திறப்பதில்லை என்பதில் உறுதியாகஇருந்தது, அவ்வளவு பயம்."சரி அந்தஆட்டையே தூக்கிக் கொண்டுவா" என்றான் வாய்வல்லன். கைவல்லனும் குட்டிபூதத்தை தூக்கி தோளில் சுமந்து கொண்டுவர இருவரும் வீடு நோக்கி வேகமாக நடந்தார்கள்.
    வீட்டை நெருங்கும் போது சனியன்பிடித்த மூத்திரத்தை அடக்கவே முடியவில்லை குட்டிபூதத்தால், கைவல்லன் தோளின் மீதே மூத்திரத்தை அடித்து விட்டது, குட்டிபூதம்!!. "அடச்சீச்சீ கருமமே" என்று கூறியபடியே சற்று பிடியைத் தளர விட்டான் கைவல்லன். இதுதான் சமயமென்று தோள்பட்டையிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தது குட்டிபூதம். ஓட்டம் என்றால் உங்கள்ஓட்டம் எனது ஓட்டமல்ல, ஒலம்பிக்கில் ஓடியிருந்தால் தங்கப் பதக்கமே  கிடைத்திருக்கும்.
   "ஐய்யய்யோ ஆடு ஓடிப் போச்சே!! என்றான் கைவல்லன்."போடா தம்பி இப்படியா! கவன‌க் குறைவாக இருப்பது?" என்றான் வாய்வ‌ல்லன். வெகு தூரம் ஓடியபின்பு சற்றுநின்று திரும்ப்பிப் பார்த்தது குட்டிபூதம்,"அப்பாடா! யாரும் துரத்திக்கொண்டு வரவில்லை பூதசாமி முனியப்பா தான் இன்னைக்கு காப்பாத்தியது" என்று சந்தோசமடைந்த‌து.அதோடு கீதத்தின் வீட்டிற்க்குச் செல்லும் வ‌ழியையும் நினைவு படுத்திக் கொண்டது.
பிறகு காட்டில் தன் அப்பா, அம்மாவை தேடி ஓடியது . பாறைக் குகையில் அவர்களைக் கண்டதும் தான், போன உயிர் திரும்பிவந்தது குட்டிபூததிற்க்கு.
    "ஆடுஓடிப்போச்சே இனிஎன்னசெய்வது" என்றான் கைவல்லன், "என்ன செய்வது பேசாமல் பழையசோறு இருந்தால் சாப்பிட்டு படுப்போம் , இனி மீண்டும் ஆட்டுப்பட்டிக்குச் சென்றால் சாப்பிடச்சென்ற தாத்தா வந்திருப்பார்" என்றான்வாய்வல்லன். சத்தம் கேட்டு வெளியே வந்த வாய்வல்லிக்கு ஆடு ஓடிப்போன கதை பாதிபுரிந்தது,"ஏன்?கைவல்லன் மாமா!ஆடு என்ன அவ்வளவு பெரிசா!!நீங்களே பிடிக்க முடியாத அளவு!!?" என்றாள் வாய்வல்லி.
    "அந்த சனியன் பிடித்தஆடு என்தோளின் மீதேமூத்திரத்தை அடித்துவிட்டது இல்லை யென்றால் பிடியைத்தளர விடுவேனா? என்றான் கைவல்லன், பின்பு மூவரும் பழையதை சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிப்போனார்கள்.
    அப்பாபூததிற்க்கு குட்டிபூதம் சொன்ன கதையை நம்பவும் முடியவில்லை நம்பாமலிருக்கவும் முடியவில்லை, என்ன இந்த‌காட்டில் கீதமா? நான் இதுவரை கேள்விப்படவே இல்லையே" என்றது.  "என்பையன் பொய் சொல்ல மாட்டான், நாம் இப்போதே சென்று அந்த கீதத்தை மிரட்டி விரட்டியடிப்போம்" என்றது அம்மாபூதம்.
    சரி என்று மூன்றுபூதங்களும் காலில் சலங்கையை கட்டிக் கொண்டு,"சலீலீங்...!! சலீலீங்...!!"என்றுசப்தம் எழுப்பியவாரே கீதத்தின் குடிசையை  நோக்கி கிளம்பின.
பாதி தூக்கத்தில் இருந்த கைவல்லன் "சலீலீங்...!! சலீலீங்...!!"என்று சப்தம் கேட்டு மெதுவாகக் கண்திறந்து வாசல்பக்கம் பார்த்தான்,'அம்மாடியோவ்! மூன்றுபூதங்கள், 'தூக்கமெல்லாம் பறந்தோடிப் போனது கைவல்லனுக்கு! தாழ்வாரத்தில் படுத்திருந்த கைவல்லன் மெதுவாக உருண்டு குடிசை கதவைத்தட்டி, "அண்ணா??! அண்ணி?! ரெண்டுபேரும் வெளியே பாருங்கள்" என்றான். குடிசை ஓட்டை வழியாக வாசலை பார்த்த போது மூன்று பூதங்களும் "கீதம் வெளியே வாடா!..சலீலீங்...!! சலீலீங்...!கீதம் வெளியே வாடா!.. சலீலீங்...!! சலீலீங்...!" என்று  ஆடிக்கொண்டிருந்தன.
     வாய்வல்லனுக்கு, ஒன்று மட்டும் புரிந்துபோயிற்று 'என்ன காரணத்தினாலோ இந்த முட்டாள்பூதங்கள் மூன்றும் நம்மை இந்தக் காட்டைவிட்டே துரத்த முடிவுசெய்துவிட்டன' என்று ஒருவாறு யூகித்தான். பிறகு "தம்பி பயப்படாதே நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வாய்வல்லியின் காதில் என்னமோ கிசுகிசு என இரகசியமாகக் கூறிவிட்டு, தலையணையை போட்டு சாத்துசாத்து என சாத்தினான் வாய்வல்லன். வாய்வல்லியும் ஐய்யோ!ஐய்யோ! அடிக்காதீங்க! அடிக்காதீங்க! என படப்பசம்போட்டாள்.
     இந்தசத்தம் கேட்டு, மூன்று பூதங்களும் ஆடுவதை நிறுத்தி விட்டு கவனமாக கேட்டன. "சோறுஎங்கடீ" என்று சத்தமாக கேட்டான் வாய்வல்லன். "அதோ அந்த அண்டாவில் இருக்குங்க"என்று சத்தமாகவே சளைக்காமல் பதில் சொன்னாள் வாய்வல்லி. அடேயப்பா! அண்டா சோறா?என்று மலைத்து நின்றது அம்மாபூதம், அப்பா பூதமோ சற்று பயந்துதான் போயிற்று. குட்டிபூதத்திற்கோ அடிவயிறே கலங்கியது, இதேபோல, குழம்பு, ரசம், மோர் என அனைத்து கேள்விக்கும் , அண்டாவையே பதிலாகச் சொன்னாள் வாய்வல்லி, கதிகலங்கிப் போய்விட்டன மூன்று பூதங்களும். குட்டிபூதத்திற்கோ ஆய்போகாத குறைதான். "அதெல்லாஞ்சரி விளையாடப்போன பசங்க இரண்டுபேரும் மூனுபூதம் பிடித்து வந்தார்களே அதை எங்கே?"என்றுகேட்டான் வாய்வல்லன், "அதெஏ! கேட்கறீங்க அப்பாவிற்கு ஒன்னு வைங்கடானா, கேட்காமா சுட்டுத் தின்னு விட்டு தூங்கிவிட்டார்கள்" என்றாள் வாய்வல்லி.
    "ஆகா!!நாம் இந்த காட்டில் இருப்பதே ஆபத்து" என்று பயந்து போய் ஓட்டம் பிடித்தது அப்பாபூதம், அம்மாபூதம் ஓடியஓட்டத்தில் கால்சலங்கை கழன்று காட்டில் விழுந்தது, குட்டிபூதத்தின் நிலமையோ! சொல்லவே வேண்டாம். வாய்வல்லன் வீட்டுவாசலை நாறவைத்து விட்டுத்தான் பின்னாலேயே ஓடியது. வாய்வல்லன் குடும்பமும், இனி இங்க இருப்பது ஆபத்து என்று முடிவிற்கு வந்து அன்று இரவே அண்டா, சமையல் பாத்திரங்களை பெரிய கோணிப்பையில் போட்டு மூட்டைகட்டிக் கொண்டு காட்டைவிட்டே கிளம்பினார்கள்.
   
  யார்கதையை யார்சொல்லி அழுவது என்ற கதையாக‌,பூதங்களைப்பார்த்து வாய்வல்லன் குடும்பம் பயப்பட! வாய்வல்லன் குடும்பத்தை கீதம் என்று நினைத்து பூதங்கள் பயப்பட ஒரே வேடிக்கைதான் போங்கள்.
    அவ்வளவு பெரிய மூட்டையை கைவல்லன் வெகுசுலபமாகச் சுமந்து வர விரைவில் ஒரு ஆற்றின்கரை ஓரம்வந்து சேர்ந்தார்கள். இரவில் ஆற்றைத்தாண்டிச்செல்ல முடியாமல் அருகில் இருந்த ஆல‌மரத்தின் பெரியகிளையில் ஏறிப்படுத்துக் கொண்டார்கள். அதிகாலை "சலீலீங்.! சலீலீங்" என்று சப்தம் கேட்டு பயந்து எழுந்த கைவல்லன்,கீழேபார்த்தான். மூன்று பூதங்களும் காடெல்லாம் சுற்றி விட்டு இவர்கள் படுத்திருந்த ஆலமரத்தின்கீழேயே வந்துநின்றன, தான் பிடித்திருந்த பெரியகோணிப்பை மூட்டையை இறுகப்பிடித்துக் கொண்டே, தட!தட! வென மூன்றுபூதங்களுக்கும் நடுவில் விழுந்தான் கைவல்லன், திடுக்கிட்ட மூன்றுபூதங்களும், சுதாரிப்பதர்க்கு முன்பாகவே வாய்வல்லன் சுதாரித்துக் கொண்டான். "விட்டுவிடாதே தம்பி மூன்றையும் பிடித்துக்கோ!!"என்று சப்தம்போட்டான் வாய்வல்லன்.
     "ஆகா கீதம்நம்மை விடாதுபோல" என்று மூன்று பூதங்களும் பயந்து ஓடிய‌ஓட்டத்தில் அப்பா பூதமே "ஆய்" போய் விட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
    
 பிறகு என்ன?வாய்வல்லன் குடும்பம் விடிந்ததும், ஆற்றை கடந்து
சென்று, பயமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள்.
=============================
'சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மூத்த அக்காள் ஒருவர் சொல்லக் கேட்ட கதை இது.'
அன்புடன்; கெ.கந்தசாமி பொங்கியம்மாள். {21.01.2019}kandasamystory@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்