திங்கள், 18 பிப்ரவரி, 2019

வரப்பருத்திக்காடு


முன்னொரு காலத்தில் கடும்வறட்சியால் காய்ந்து போன ஒரு பருத்திக்
காடு இருந்தது. மக்கள் அதை   வரப்பருத்திக்காடு என்று அழைத்தனர் .
அங்கு ஒரு தந்திரக்கார‌ நரிவாழ்ந்து வந்தது. அந்த நரி காலையில் வேட்
டையாடி உண்டுவிட்டு அருகிலிருந்த ஆற்றில் தண்ணீர் குடிக்கச் செல்லும்.
வழக்கமாக இது நடைபெற்று வந்தது. நரி  மதியவேளையில்  ஆற்றின்
ஆலமரத்தடியில் வந்து நீர் குடிப்பதை ஒரு முதலை கவனித்து வந்தது.
ஒரு நாள் நரி ஆற்று ஓரத்தில் இருந்த ஆலமரத்தடியில் வந்து தண்ணீர்
குடித்தது, அதன் முன் கால்கள் இரண்டும் ஆற்று  நீருக்குள் இருந்தது.
இதை கவனித்த அந்த முதலை அதன் ஒரு   காலைப்   கவ்வி பிடித்துக்
கொண்டது .'ஆகாகா! இன்று செத்தோமடா சாமி' என்று  பயந்த  நரி
பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் "ஆஹா எனது கால் என்று
நினைத்து ஆலமரத்து வேரை பிடித்துக்கொண்டது முட்டாள் முதலை "
என்று பலமாகச்சிரித்தவாறு சொல்லியது . உடனே முதலை நரியின்
காலை விட்டுவிட்டு அருகில் தெரிந்த ஆலமரத்தின் வேரை   கௌவ்விக்
கொண்டது,'பிழைத்தது தம்பிரான் புண்ணியம்' என எண்ணியபடியே
தப்பித்து ஓடியது நரி. முதலைக்கோ ஏமாற்றமாக  போய்விட்டது பசி
ஒருபுறம் வாட்டியது,   'சரி நாளைக்கு  பார்த்துக் கொள்வோம்'
என்று மனதை தேற்றிக்கொண்டது. மறுநாளும் தாகத்திற்கு தண்ணீர்
அருந்த நரி அதே இடத்திற்கு வந்தது. இந்த முறை சற்று  கவனமாக
ஆற்றை நோட்டமிட்டது . முதலை மறைந்து  கொண்டு இருப்பதை
கவனித்து விட்டது. "இங்கு முதலை இருக்கிறது நாம் சற்று   கீழே
போய் தண்ணீர் குடிப்போம்" என்று சத்தமாக கூறிவிட்டு ஆற்றின்
கரையிலேயே சிறிது கீழ் நோக்கி ஓடியது.   இதை கவனித்த முதலை
ஆற்றுநீரின் அடியிலேயே கீழ் நோக்கி வந்தது, நரி எதிர்பார்த்தபடியே
நடந்ததால் அது உடனே மேல் நோக்கி வேகமாக ஓடி வந்து  பழைய
இடத்திலேயே தண்ணீர் குடித்துச் சென்றது.
இந்த முறையும் முதலை
தோல்வியே அடைந்தது. இப்படியே நாள் போயிற்று சிறிது காலத்தில்
மழையின்றி ஆற்றுத் தண்ணீர் வற்றிப்போயிற்று   அங்கங்கே குழி
குட்டையில் மட்டுமே சிறிது தண்ணீர் தேங்கியிருந்தது ஒரு மடுவில்
முதலை மாட்டிக்கொண்டது அதனால் மேலே ஏறி வர முடியவில்லை
அப்போது அந்த வழியே வழிப்போக்கன் ஒருவன் சென்றான் முதலை
அவனை கூப்பிட்டு தான் மேலே வர உதவி செய்யுமாறு வேண்டியது.
அதற்கு அந்த மனிதன் "நீ மேலே வந்ததும் பசியில் என்னை கொன்று
தின்று விடுவாய் என்றான். "உதவி செய்பவரை உபத்திரம் செய்ய
மாட்டேன் தயவு செய்து என்னை காப்பாற்று என்று கெஞ்சியது" வழிப்
போக்கனும் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக, தன்னிடம்
இருந்த வேஷ்டியை     முதலையிடம் போட்டு  அதை      கவ்விப்பிடிக்கச்
சொல்லி முதலையை மேலே இழுத்துப் போட்டான். முதலைக்கோ
அகோரப்பசி உடனே அது அந்த மனிதனை தின்னப்   பாய்ந்தது
"ஏய் நன்றிகெட்ட  முதலையே நீ செய்வது அநியாயம்என்று  கூச்
சலிட்டான் "நியாயமும்  அநியாயமும் எனக்கு பசி வந்து விட்டால்
 எல்லாம் ஒன்றுதான்" என்றது முதலை. உடனே அந்த மனிதன் நீ
செய்வது நியாயமா அநியாயமா என்று மூன்று பேரிடம் கேட்போம்
மூவரும் நியாயம் என்று கூறிவிட்டால் நீ என்னைத் தாராளமாக உண்
ணலாம் என்று கூறினான். முதலைக்கு இந்த பஞ்சாயத்து எனோ பிடித்
துப்போய்விட்டது சரி என்ற முதலை, முதலில் பருத்திக் காட்டில் மேய்ந்த‌
வயதான பசுவிடம் போய் நடந்த கதையைச் சொல்லி நீதி கேட்டது
அதற்கு
அந்த பசு "இந்த மனிதர்கள் நான் இளம் பசுவாக இருந்த‌ போது நன்றாக
புல் கொடுத்தார்கள், தவிடு கொடுத்தார்கள், புண்ணாக்கு, பருத்திக்
கொட்டை எல்லாம் கொடுத்தார்கள் என்னை, நன்றாக கவனித்தார்கள்.
நானும் அவர்களுக்கு நன்றாக பால் கொடுத்தேன் இப்போது எனக்கு
வயதாகிவிட்டதால் பால் கொடுக்க முடியவில்லை என கூறி இந்த வறண்ட
 பருத்திக்காட்டில் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். எனவே இந்த மனித
ரிடம்  நீ  நன்றி காட்ட வேண்டியது  இல்லை. நீ இந்த மனிதனைப் பிடித்து
தின்று விடலாம்" எனத் தீர்ப்புக் கூறியது.
உடனே அந்த மனிதனை தின்ன
 பாய்ந்தது முதலை. அதற்கு அவன் "இரு இரு இன்னும் இரண்டு நபர்கள்
பாக்கி இருக்கிறார்கள் என்றான்"சரி என்ற முதலை அடுத்து அங்கு காய்ந்த
 புல்லைக் கரண்டு கொண்டிருந்த வயதான குதிரையிடம் சென்று நடந்ததை
கூறி நான் இந்த மனிதனிடம் நன்றி பாராட்ட வேண்டுமா அல்லது பிடித்து
தின்றுவிடலாமா?" என்று கேட்டது அதற்கு குதிரையும் நான் இளமையில் 
இருந்த போது மனிதர்கள் எனக்கு நல்ல புல், கொள்ளு, கொடுத்தார்கள்.
என்னை வண்டியில் பூட்டிசவாரியும் செய்தார்கள் இப்போது எனக்கு வய
தாகிவிட்டதால் நடக்கவே சிரமப்படுகிறேன். மனிதர்களும் என்னை இந்த
காட்டில் அனாதையாக விட்டுவிட்டார்கள் எனவே நீ இந்த மனிதனிடம்
நன்றி காட்ட வேண்டியதில்லை பிடித்து தின்னலாம்" என்று கூறியது. உடனே
அந்த முதலை வழிப்போக்கனை பிடித்து தின்ன முயற்சித்தது, உடனே அவன்
இரு இரு இன்னும் ஒரு நீதிமான் பாக்கி இருக்கின்றார் என்றான், சரி என்றது
 முதலை இந்த முறை அந்த மனிதனே அருகில் வேட்டையாடித்  திரிந்த நரி
யிடம் சென்று நடந்த கதையை கூறி நீதி கேட்டான். அதற்கு அந்த நரி
முதலையை பார்த்து ஆஹா நீ தாராளமாக இந்த மனிதனைப் பிடித்து தின்
னலாம் ஆனால் அதற்கு முன் ஒரு சந்தேகம் நீ எந்த குழியில் எப்படி மாட்டிக்
கொண்டாய் இந்த மனிதன் எவ்வாறு உன்னை காப்பாற்றினான் என்பதில்
எனக்கு சிறிது சந்தேகமாக உள்ளது என்றது.
உடனே முதலை இருவரையும் அழைத்
துக்கொண்டு பழைய மடுவிற்கே வந்தது. உடனே மடுவிற்குள்ளும்  குதித்தது.
நான் இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் . என்றது.  நரியும்  "சரி அப்படியேகிட"
என்று கூறிவிட்டு,  "ஏய் மூட மனிதனே ஓடிப் போய் விடு " என்றது   அந்த
வழிப்போக்கனும் விட்டது சனியன் என ஓடிப் போனான்.
பிறகு சிறிது காலம்
சென்று ஆற்றில் வெள்ளம் வந்து முதலையும் மடுவை விட்டு மேலே வந்தது ,
அன்று முதல் இன்று வரை அந்த நரியை தேடிக்கொண்டிருப்பதாக செய்தி.
======================== ===
'சுமார் 52 வருடங்களுக்கு முன்பு என் தந்தையிடம் பல‌முறை கேட்ட கதை இது.'
 அன்புடன் :கெ.கந்தசாமி பொங்கியம்மாள் {17.2.2019} kandasamystory@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்