வியாழன், 2 மே, 2019

சுண்டு விரல் பையன்

ஒரு ஊரில் குப்பன் குப்பி என்ற தம்பதிகள்
வாழ்ந்து வந்தார்கள்.அவர்களுக்கு நீண்ட
நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை.
அவர்களும் வேண்டாத
தெய்வமில்லை,
போகாத கோயில், குளங்களும் இல்லை ஒருநாள் குப்பியின் கனவில், முனிவர்
ஒருவர் தோன்றி, உனக்கு குழந்தை வரம்
தருகிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை, உன்
   
குழந்தை சாதாரண  குழந்தையாக‌ பிறந்தால்,
குறைவான ஆயுள் தான் உயிர் வாழும்.
ஆனால்,சுண்டு விரல் அளவில்  பிறந்தால்,
100ஆண்டுகள் வரைஉயிர் வாழும் உனக்கு
எந்த‌ குழந்தை வேண்டும் என்றார்.
   
உடனே குப்பியும் எனக்கு நீண்ட ஆயுள்
உள்ள குழந்தையை பெறஅருள் தாரும்
என வேண்டினாள். முனிவரும் அவ்வாறே
தந்தேன் எனக் கூறி மறைந்தார்.
குப்பி கனவில் இருந்துமீண்டு எழுந்து,
கணவனை எழுப்பி தன் கனவை கூறினாள்.

அவனுக்கு ஏனோ அதில் நம்பிக்கை இல்லை.
சொல்லிவைத்தாற்போல் அடுத்த ஆண்டு
குப்பிக்கு ஒருஅழகான ஆண் குழந்தை
பிறந்தது.ஆனால் என்ன ஆச்சரியம் அக்
குழந்தை ஒரு சுண்டு விரல் அளவிற்கே
இருந்தது. குப்பனும் குப்பியும் அக்குழந்தைக்கு
சுடலை என பெயர் வைத்து கண்ணும்
கருத்துமாக அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
சுடலைக்கு 16 வயது ஆனபோது, ஒரு நாள்
குப்பன், தோட்டத்து வேலைக்காக வயலுக்கு
சென்று விட்டான். மதியம் குப்பி அவனுக்கு
சமையல் செய்து  எடுத்துச்  செல்லும்போது ,
சுடலை சொன்னான் ''அம்மா இன்று முதல்
அப்பாவுக்கு நான் உணவு எடுத்துச் செல்
கிறேன்,சவாரி வண்டியை பூட்டி சாப்பாடு
தூக்கை அதில் வைத்து விடுங்கள். என்னையும்
தூக்கி மாட்டின் வலது காதில் விட்டுவிடுங்கள்''.
என்று சொன்னான்.


  
           குப்பி சற்று பயந்தாலும் சுடலையின்
புத்திசாலித்தனமும் சாதுர்யமும் புரிந்தவளாதலால்
அவ்வாறே செய்தாள்.
   சுடலைக்கு மாட்டின் மொழி தெரியுமாதலால், மாட்டின்
காதில் ''போ'' என்றான்.  உடனே வண்டி புறப்பட்டு சென்றது.
சிறிது தூரம் சென்றதும், ''இடது பக்கம் திரும்பு '' என்றான்.
பின் ''வலது'' என்றான். இவ்வாறே வழி கூறியபடி,
தன் தந்தை வேலை செய்யும் வயலை அடைந்தான்.
  வண்டியை பின்தொடர்ந்த இரண்டு திருடர்கள்,
'ஆளில்லாமல் வண்டி எவ்வாறு செல்லும்' என்று
ஆச்சரியப்பட்டு இறுதிவரை சென்று பார்த்துவிடுவது
என்று வண்டியை பின் தொடர்ந்தார்கள்.
சுடலையோ தன் தந்தையைப் பார்த்து ''அப்பா
என்னை கீழே இறக்கி விடுங்கள் என்றான். ''குப்பனோ
சுடலையை காணாமல் அங்கும் இங்கும் தேடினான்.
மீண்டும் சுடலையோ''அப்பா நான்
மாட்டின் வலது காதில் உள்ளேன். என்னை
கீழே இறக்கி விடுங்கள்’’என்றான்.
குப்பனும் சுடலையை பத்திரமாக எடுத்து தன‌து
சட்டைப்பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.
இதைப்பார்த்த திருடர்கள் இருவருக்கும்  ஒரே
ஆச்சரியம்! இப்படி ஒரு சிறுவன் கிடைத்தால்
கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்  என்று எண்ணி,
எந்த விலை கொடுத்தாலும் சுண்டுவிரல் பையனை
விலைக்கு வாங்கிவிடவேண்டும் என எண்ணினார்கள்.
உடனே குப்பனிடம் பேரமும் பேசினார்கள்.
‘’அது மட்டும் முடியாது’’ என்றான் குப்பன்.
இதைக் கேட்ட சுடலை தன் தந்தைக்கு
மட்டும் கேட்கும்படி ‘’அப்பா ஒரு லட்சம் பணம்
கேளுங்கள். நான் எப்படியும்
வந்துவிடுவேன்’’ என்று குப்பனுக்கு மட்டும்
கேட்கும்படி கிசுகிசுத்தான்.
குப்பனும் சரி என்று, ஒரு லட்சம் பணம்
இருந்தால் பேசுங்கள் என்றான்.  திருடர்களும்
தங்களுக்கு கிடைக்கும் பலனை  நினைத்து!
தங்களிடம் இருந்த‌ ஒரு லட்சம் பணத்தை கொடுத்து
சுடலையை வாங்கி தங்கள் பாக்கெட்டில்
போட்டபடி நடையை கட்டினார்கள்.
  
அன்று இரவு12 மணிசுமாருக்கு தாங்கள் கொள்ளையிட
முடிவு செய்த பங்களாவிற்கு
சென்ற  திருடர்கள்
இருவரும்,சுண்டு விரல் பையனிடம்''ஜன்னல்
வழியே உள்ளே சென்று யாரும் இருக்கிறார்களா?’’
என்று பார்க்கச் சொன்னார்கள்.
   
புத்திசாலியான சுடலை உள்ளே சென்று [அங்கு
தூங்கியவர்கள் எல்லோரும் விழித்துக்கொள்ளும்படியாக‌]
டேய் திருடா! திருடா! இங்கு எல்லோரும்
தூங்கிவிட்டார்கள். உள்ளே வாருங்கள் என்று
சத்தமாக கத்தினான் .
  உடனேவீட்டில் இருந்தவர்கள் எழுந்து திருடர்களைப்
பிடித்து அடித்து உதைத்து
கிராம காவல்
அதிகாரியிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.
 
  சுடலையையாரும் பார்க்கவே இல்லை,
சுடலையும் அந்த வீட்டைவிட்டுகிளம்பி வந்த
வழியே ஒரு ஓரமாகச் சென்று தன் வீட்டை வந்தடைந்தான்.
தங்கள் மகன் திருடர்களிடமிருந்து புத்திசாலித்தனமாக‌
மீண்டு வந்ததால் குப்பனும் குப்பியும் இரட்டிப்பு
சந்தோசத்துடன் வாழ்ந்தார்கள்.
[எனது அண்ணா ஒருவர் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கூறிய‌கதை]
அன்புடன்;கெ.கந்தசாமி பொங்கிய‌ம்மாள். kandasamystory@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்